Sunday, 18 March 2012

குறுகிய எதிர்காலத்தில் யாரும் எட்டமுடியாத மைல்கல்! சத சத சச்சினின் சத வரலாறு!

 
சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை எடுத்து முடித்தார். ஆனால் அது வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியில் முடிந்ததைக் கண்டு அவர் நிச்சயம் வருந்தியிருப்பார். அவர் எடுத்த சதங்களும் சாதனைகளும் இனி குறுகிய எதிர்காலத்தில் முறியடிக்கும் வீரர்கள் இல்லை என்றே கூறலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 99வது சதத்தை எடுத்த சச்சின் அதன் பிறகு டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் சேர்த்து 33 இன்னிங்ஸ்கள் காத்திருக்கவேண்டியதாயிற்று. 34வது இன்னிங்ஸான இன்று வங்கதேசத்திற்கு எதிராக அவர் சதம் கண்டார்.

சத சதங்கள் இனி எந்த ஒருவீரரும் எட்ட முடியாதது என்றே கூறிவிடலாம். முதன் முதலாக நியூஸீலாந்து அணிக்கு எதிராக அவர் துவக்க வீரராக தானே கேட்டு வாங்கி களமிறங்கினார் அந்தப் போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்களை விளாச அன்று முதல் சச்சின் என்றாலே வயிற்றில் புளியைக் கரைக்கும் பந்து வீச்சாளர்களும், அணிகளும் பெருகியது.

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பை ஒருநாள் போட்டியில் அவர் தன் முதல் ஒருநாள் சதத்தை எடுத்தார். அதில் அவர் மெக்டர்மட் பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஹைபிளிக் சிக்ஸ் அடித்தது மறக்க முடியாத காட்சி. அதே போல் ஷார்ஜாவில் ஒருமுறை வாசிம் அக்ரம் உலக அச்சுறுத்தலாய் இருந்தபோது அவரை கிட்டத் தட்ட ஸ்லாக் ஸ்வீப் செய்தது போன்று ஸ்கொயர் லெக் திசையில் அடித்த சிக்சரும் மறக்க முடியாததாகும்.

2008ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரையிலான காலக்கட்டத்தில் உலகின் எந்த ஒரு பேட்ஸ்மெனும் இல்லாத பார்மில் இருந்தார் சச்சின். இந்தக் காலக்கட்டத்தில் தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 65.21 என்ற சராசரியில் ரன்களைக் குவித்தார் ஒருநாள் போட்டிகளில் 52.41 என்ற சராசரியில் ஒரு இரட்டை சதத்துடன் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர் 104 இன்னிங்ஸ்களில் 21 சதம் எடுத்து உலகை அதிசயிக்க வைத்தார். பாண்டிங் 147 இன்னிங்ஸ்களில் 11 சதங்களையும் காலிஸ் 113 இன்னிங்ஸ்களில் 13 சதங்களையும் எடுத்து சச்சினை நெருங்க முடியாதிருந்தனர். 



அவரது கிரிக்கெட் வாழ்வில் 31வது சதத்திலிருந்து 40வது சதம் எடுத்ததுதான் அதி விரைவான இன்னிங்ச்களில் நடந்தது. அதாவது 36 இன்னிங்ஸ்களில் இந்த 10 சதத்தை எடுத்தார். சச்சின். 41வது சதத்திலிருந்து 50வது சதம் 67 இன்னிங்ஸ்களில் எடுத்தார். 91இலிருன்ந்து 100வது சதத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட இன்னிங்ஸ்கள் 65 (நன்றி: கிரிக் இன்ஃபோ இணையதளம்).

அதே போல் இவர் காலக்கட்டத்தில் அசைக்க முடியாத அணியாக இருந்த கிளேன் மெக்ரா, ஷேன் வார்ன் ஆகிய உலகச் சாதனையாளர்கள் இருந்த ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சச்சின் இதுவரை 137 இன்னிங்ஸ்களில் இரு வடிவங்களிலும் 20 சதங்களை எடுத்துள்ளார் சச்சின். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 சதங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 9 சதங்களையும் அவர் எடுத்துள்ளார்.

இதற்கு அடுத்த படியாக முரளிதரன் இருந்த இலங்கை அணிக்கு எதிராக 17 சதஙகலை எடுத்துள்ளார். டெஸ்ட் 9, ஒருநாள் 8. தென் ஆப்பிரிக்கவுக்கு எதிராக 12 சதங்கள், இங்கிலாந்துக்கு எதிராக 9 சதங்கள். நியூசீலாந்துக்கு எதிராக 9 சதங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 7 சதங்கள் என்று அனைத்து முன்னணி அணிகளுடனும் வெளுத்துக் கட்டியுள்ளார் சச்சின்.

சச்சின் சதம் எடுத்தால் இந்தியா வெற்றி பெறாது என்று இன்றைய போட்டி உட்பட பல போட்டிகளைச் சிலர் கூறுவதுண்டு. ஆனால் புள்ளி விவரங்கள் கூறுவதோ வேறு. 100 சதங்களில் 53 சதங்கள் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளன. அதில் டெஸ்ட் வெற்றி 20 ஒரு நாள் வெற்றி 33.

அவர் சதம் எடுத்து இந்தியா தோல்வி தழுவியது இன்றைய போட்டியைச் சேர்த்து 24 போட்டிகள். இவருக்கு முன்னிலையாக வெற்றிகளில் முதன்மை வகிப்பவர் பாண்டிங் அவர் எடுத்த மொத்த சதங்களில் 55 சதங்களில் ஆஸ்ட்ரேலியா வெற்றிகண்டுள்ளது. ஆனால் ஆஸ்ட்ரேலியா வெற்றி கண்டதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் சச்சினால் வெற்றி பெற்ற போட்டிகளில் பல அவர் தனி நபராய் போராடி வென்றதே அதிகம், எதிர்முனையில் அதிகம் ஆதரவு இருந்ததில்லை.

அதேபோல் உலகிலேயே சதத்தில் சீரான முறையில் ஆடி வந்தவர் சச்சின் டெண்டுல்கர்தான். இவர் ஒவ்வொரு 7 இன்னிங்ஸ்களுக்கு ஒரு முறையும் சதம் எடுத்துள்ளார். இதற்குக் கீழ்தான், லாரா, பாண்டிங், காலிஸ், ஹெய்டன் அனைவரும்.

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட், மற்றும் ஒருநாள் ஆண்டு ரீதியான சத வரைபடம் இதோ:

FILE

No comments:

Twitter Bird Gadget