சென்னை: இயக்குநர் அமீருக்கு எதிராக எஸ்ஏ சந்திரசேகரன் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சங்கத்துக்கு எதிராக செயல்படுவதால் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம் போன்றவை அவருக்கு ஒத்துழைப்பு தராது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்துக்குப் பிறகு, இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், சில கசப்பான நிகழ்வுகளை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது, தயாரிப்பாளர்களை மிகுந்த அளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அமீர் பிரச்சினை
டைரக்டர் அமீருக்கும், ஸ்டூடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையில் 2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 'பருத்தி வீரன்' திரைப்படம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. அமீர் தனது சொந்த பிரச்சினைக்கு பெப்சி அமைப்பையும், சம்மேளனத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் ஒரு சிலரையும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி உள்ளார்.
ஞானவேல்ராஜா தயாரிக்க, கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற புதிய படப்பிடிப்பு பல்லாவரம் அருகே நடைபெற்றபோது, திரைப்பட தொழிலாளர்கள் காலதாமதமாக சென்று தயாரிப்பாளருக்கு பெரும் பொருள் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளனர்.
ஆந்திராவில்...
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தொடர்ந்த இடைïறுகள் காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்த முடியாத ஞானவேல்ராஜா, பக்கத்து மாநிலமான ஆந்திராவில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அங்கு சரியாக உணவு வழங்கவில்லை என்ற 'உப்புக்கு சப்பில்லாத' காரணத்தைக் கூறி, 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ராதாகிருஷ்ணன் தயாரிக்க, விதார்த் நடிக்கும் `காட்டுமல்லி' படப்பிடிப்பையும் நிறுத்தியுள்ளனர்.
தீர்மானங்கள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டு வரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் இந்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் அமீர் மீது சங்க விதிமுறைகளின்படி, நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் எந்த ஒத்துழைப்பும் தராது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்புகள் ரத்து
* தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் போக்கினால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) எல்லா தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். அன்று காலை 11 மணிக்கு அனைவரும் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
* தங்கள் செய்கைக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை, ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்துகொள்ளாது.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment